முதலாம் இராசராச சோழரின் கல்வெட்டு்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

அமைவிடம்:தஞ்சாவூர் பெரிய கோயில் வடபுறத்தின் இணைப்பின் வெளிப்பக்கத்தில் உள்ளது (On the outside of the North Enclosure)
அரசன் :முதலாம் இராசராசன்
ஆட்சியாண்டு: 29
பொ.ஆண்டு :1014
மொழி :தமிழ்
எழுத்து :தமிழ் , கிரந்தம்

கல்வெட்டு செய்தி்

சோழ மண்டலத்தில் பிற இடங்களில் இருக்கும் கோயில் பணிப்பெண்களை தஞ்சாவூர் பெரியக்கோயில் பணிக்காக நியமிக்கிறார் சோழ மன்னன் முதலாம் ராஜராஜன். ஏற்கெனவே பெரிய கோயிலில் பணியாற்றும் தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் தற்பொழுது வீடும் பங்கும் ஒதுக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் மொத்தம் 400 தளிச்சேரிப் பெண்டுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களை இங்கு குடியமர்த்தியதுடன் அவர்களுக்கான பணிகளும் ஊதியமும் நிர்ணயிக்கப்பெற்று கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இவ்வூதியம் பங்கு என்ற தொடரினால் சுட்டப்பெற்றுள்ளது. கோயில் பணி செய்யும் பெண்கள் ''தேவரடியார்'' என்றும் ''தளிச்சேரிப் பெண்டுகள்'' என்றும் அழைக்கப்பெற்றுள்ளனர். இவர்கள் பதியிலார் என்றும் அழைக்கப்பெறுவது உண்டு. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் விளையும் ஒரு வேலி நிலம் காணியாக வழங்கப்பெற்றுள்ளது. காணிப் பெற்ற தேவரடியார் இறந்துவிட்டால் அவரது வம்சத்தாரில் யோக்யராய் இருப்போருக்கு அக்காணி வழங்கப்பெற்றுள்ளது. அவ்வாறு அவ்வம்சத்தில் யோக்யர் இல்லாதுபோனால் யோக்யராய் இருப்போரை மற்றவர் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் கூறப்பெற்றுள்ளது.

400 தேவரடியார்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வீடுகள் தலைவீடு, இரண்டாம் வீடு,மூன்றாம் வீடு என்று வரிசைப்படுத்தப் பெற்றுள்ளன.

சிறப்புச் செய்தி

தேவரடியார்களில் ஒரு படி நிலை அமைப்பு இருந்திருப்பதை இவ்வீடு ஒதுக்கீட்டிலிருந்து அறியலாம். தலைவீடு திருவையாற்று ஒலோகமாதேவி ஈஷ்வரத்து நக்கன் சேரமங்கைக்கு ஒதுக்கப்பெற்றுள்ளது. எனவே, இவர் தலைமை தேவரடியாராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், பங்கு பெரும்பாலும் அனைவருக்கும் ஒரே அளவே வழங்கப்பெற்றுள்ளது. இவர்கள் பெயர்களில் தந்தை பெயர் இடம்பெறுவதில்லை. பெரும்பாலும் இவர்கள் பெயர்களில் ''நக்கன்'' என்ற முன்னொட்டு இடம்பெறுகிறது. இதைக் கல்வெட்டுப் பாடத்தில் காணலாம். இப்பெண்கள் கோயிலில் பூ தொடுத்தல் , சாணம் இட்டு மெழுகுதல் போன்ற பணிகளுடன் தெய்வத்திருவின் முன் ஆடவும் பாடவும் செய்துள்ளனர்.

தேவரடியார்களுக்கு மட்டுமின்றி பெரிய கோயிலைக் கட்டிய தச்சர், நட்டுவாங்கம் வாசிக்கும் நபர், இன்னும் பிறருக்கும் பங்கு வழங்கப்பெற்றுள்ளது. இதில் தச்சரின் பெயர் இராஜராஜ குஞ்சரமல்லன் என்பதாகும். இவர் அரசரின் பெயரினைக் கொண்டுள்ளதால இவர் தலைமை தச்சராக இருக்கவும் வாய்ப்புண்டு. மேலும் இவர் தச்சாச்சாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.